இவங்களுக்கு ஏன் ஜனங்க ஓட்டு  போடமாட்றாங்க...

இவங்களுக்கு ஏன் ஜனங்க ஓட்டு  போடமாட்றாங்க...
Published on

தேசிய அளவில் முன்னணி தலைவராக நிலை நின்றிருந்தவர். தமிழக அரசியலை அவரைத் தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது. இரண்டுமுறை முதல்வராக இருந்தார். அவர்காலத்தில்தான் கிராமங்கள் தோறும் கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழைகளுக்கும் கல்வி என்பதை சாத்தியமாக்கியவர். இப்படியான பெருமைகொண்ட பெருந்தலைவர்  வேட்பாளராக நிற்கிறார். அவரை எதிர்த்து அறியப்படாத இளைஞரான சீனிவாசன் என்பவரை திமுக- தரப்பு வேட்பாளராக நிறுத்துகிறது. பெருந்தலைவர் காமராஜர் தோற்கிறார்.

கக்கன் என்றால் எளிமையின் மறு உருவம் என்பதை கடந்த தலைமுறை நன்கறியும். அப்படியான கக்கனை எதிர்த்து தி.மு.க சார்பாக ஓ.பி. ராமன் என்ற சாதாரண ஓர் இளைஞனை நிற்கவைத்தார்கள். மக்களுக்கு போதிய அறிமுகம் இல்லாதவர்தான். ஆனாலும் ராமனை வெற்றிபெற வைத்து, கக்கனை தோற்கடித்தார்கள்.

இரா.செழியன். மெத்தப்படித்தவர். 22 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். சிறந்த நாடாளுமன்றவாதி என போற்றப்பட்டவர். அவர் ஜனதாகட்சி நாடாளுமன்ற வேட்பாளராக தென்சென்னையில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திரைப்பட நடிகை வைஜெயந்தி மாலாவை காங்கிரஸ்கட்சி நிறுத்த, இரா. செழியன் தோற்கடிக்கப் படுகிறார்.

பழ நெடுமாறனின் எளிமை, நேர்மை குறித்து இந்த தலைமுறையினரும் அறிவார்கள். பழ நெடுமாறன் காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடுகொண்டு வெளியேறினார். தனிக்கட்சி தொடங்கினார். 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அ.திமு.க.வோடு கூட்டணி வைத்து மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். அந்த தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் தழுவிய மக்கள் நலன் என்று சுழன்றார். 1984-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அந்த தொகுதியிலேயே வேட்பாளராக நின்றார். இந்த முறை அதிமுக-காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டதால் பழ நெடுமாறன் திமுக-வோடு கூட்டணி வைத்துக்கொண்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக தெய்வசகாயம் என்பவர் போட்டியிட்டார். அவரை அதற்கு முன்பு யாருக்குமே தெரியாது.. எதிர்பாராவிதமாக இந்திராகாந்தி படுகொலை செயயப்பட, அந்த அனுதாப அலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான தெய்வசகாயம் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றார்.

ம.திமு.க.வின் பொதுச் செயலாளர் வைகோவின் அரசியல் நிலைப் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைகோவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்க தாகூர் என்பவர் போட்டியிட்டார். அதுவரை அவர் தொகுதி மக்களுக்கும் அறிமுகம் அல்லாதவர். ஆனாலும் புதியவரான, அவர் என்ன செய்யப்போகிறார் என தெரியாமலேயே வைகோவைத் தோற்கடித்தார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக் கண்ணு கோவையில் நாடாளுமன்ற உறுப்பினராக கோவை குண்டுவெடிப்பு  சம்பவத்தை அடுத்துப் போட்டியிட்டார். அதிமுக கூட்டணி.   இறுதியில் என்ன நடந்தது? எல்லா நல்ல தலைவர்களுக்கும் நடந்ததைப் போல அவரும் தோற்றுப்போனார். ஒரே ஒரு ஆறுதல் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி.

பாஸ்... அரசியல்  வரலாறு என்பது இப்படியெல்லாம் இருக்கிறது. நீங்கள் நல்லவராக இருக்கலாம். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடிக்கலாம். ஆனாலும் ஏதாவது ஒரு வலுவான கட்சி, வலுவான கூட்டணியில் நின்றாலும் கூட மக்கள் உங்களைத் தோற்கடித்துவிடவே  வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நீங்கள் நல்லவர். கொள்கைப்படி நடப்பவர். ஓட்டுவாங்க ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க மாட்டீர்கள்.

ஏன்? நல்லவங்க  தேர்தலில் ஜெயிப்பதை மக்கள் விரும்பவில்லையா?

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ, தேர்தல் என்பது மக்களுக்கான பிரதிநிதியை அவர்களே தேர்ந்தெடுப்பதுதான். அந்த தொகுதிக்கு, அந்த மக்களின் பிரச்னைகளை உணர்ந்து, அவர்களுக்காக உழைப்பவர்கள் யார் என்பதை தேடுவதுதான். நல்ல ஒரு அரசியல் தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்வது அந்த மக்களின் உரிமை மட்டுமல்ல. அவர்களின், அந்த தொகுதியின் வாழ்வாதாரம் வளர்ச்சி குறித்த அக்கறையாகவும் இருக்க வேண்டும்.

“இப்போது உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ‘சேவை’ எந்தளவிற்கு இருக்கிறது என ஒரு சர்வே எடுத்தால் தேறுபவர்கள் குறைவாகத்தான்  இருப்பர். சொன்ன கோரிக்கைகளை ஏதும் நிறைவேற்றியிருக்கமாட்டார். பல வேட்பாளர்கள் தொகுதிக்கு அந்நியராக மாறிப்போயிருப்பார்கள். ஆனாலும் அடுத்த தேர்தலில் ‘கட்சி மீதான பார்வையோடு’ மீண்டும் அவரையே வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கவும் தயங்கியதில்லை. பண அரசியல் பின்னணியும் ஒரு காரணம். அதனாலேயே நல்லவர்களை மக்களின் பிரதி நிதிகளாக தேர்ந்தெடுப்பதில் மக்கள் தடுமாறிப்போகிறார்கள். அக்கறையற்று நிற்கிறார்கள்” என்கிறார் அந்திமழையிடம் பேசிய ஒரு மூத்த அரசியல்விமர்சகர்.

காமராஜரை பின்தொடர்ந்த அரசியல்வாதியான திருச்சி வேலுச் சாமி,“நல்லவர்களுக்கு இங்கே இடமில்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது. மக்கள் அறியாமையில் அல்ல; தெரிந்தே தடுமாறுகிறார்கள். மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து நின்ற பல அரசியல்வாதிகள் அப்படி தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்திலும் ஆழமாக பாதித்து நின்றது பெருந்தலைவர் காமராஜரின் தோல்விதான்.  அந்த நேரத்தில் பெரியார் உட்பட பல அரசியல் தலைவர்களும் கட்சிப்பாகுபாடு இல்லாமல் காமராஜரின் தோல்விக்காக கண்ணீர்விட்டார்கள். துயரப்பட்டார்கள். வெற்றிக்களிப்பில் இருந்த திமுக-அந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. காமராஜரின் தோல்வி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ” என்று நினைவுகூர்கிறார் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்,“ மக்கள் அந்நேரத்தில் இருக்கும் கட்சியின் கொள்கை, நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கிற சக்தியாக இருப்பாரா, நமக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும்  நபராக இருப்பாரா என்றெல்லாம் பார்த்துத்தான் வாக்களிக்கிறார்கள். இதை வெறுமனே வேட்பாளர் நல்லவரா என்று மட்டும் பார்த்து முடிவு செய்வதில்லை” என்கிறார்.

“ சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் நல்லவர்கள் தேர்தலில் தேர்வு செய்யப்படாததற்கு மக்கள்தான் காரணம்  என்று சொல்லக் கூடாது. நம் நாட்டின் தேர்தல் முறையும் அதற்கு ஒரு காரணம். அதன் நடைமுறை பெரும்பணம் புரளக்கூடிய ஒன்றாக தேர்தலை மாற்றியிருக்கிறது. இந்த அமைப்பு முறை மாற்றப்படவேண்டும். ஆனால்  வார்டுகள், நகராட்சிகள் இங்கெல்லாம் நல்ல சேவை மனப்பான்மை உடையவர்களை கட்சி வேறுபாடு இன்றி இன்னமும் மக்கள் தேர்வு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் என்னிடம் நல்லவர்களை மக்கள் தேர்வு செய்யவில்லையே என்று இளைஞர்கள் கேட்கும்போதெல்லாம் அவர்களை தங்கள் சேவைகளின் மூலம் கிராமப்புற, நகராட்சித் தேர்தல்களில் நின்று அதிக செலவில்லாமல் வென்று அவற்றைக் கைப்பற்றச் சொல்கிறேன். இப்படி பத்துபேர் கவுன்சிலர்களாக வென்றுவிட்டால் அது பெரிய மாற்றங்களைக் கொண்டுவர அவர்களுக்கு உதவும்“ என்கிறார் அரசியல் விமர்சகர் ஞாநி.

“கோவையில் தோழர் நல்லக்கண்ணு தோற்றதற்கு அவர் தன் கொள்கையில் உறுதியாக இருந்ததுதான் காரணம்” என்கிறார் சி.மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்துணைச்செயலாளர். “ஒன்று அவர் புறம்பான முறையில் பணம் செலவழிக்கவில்லை. கோவை வெடிகுண்டு சம்பவத்துக்குப் பின்னர் நடந்த தேர்தல் என்பதால் இஸ்லாமியர்கள் இருக்கும் இடங்களுக்குப் போய் வாக்கு சேகரிக்கவேண்டாம். பெரும்பான்மை இந்துக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. ஆனால் அவர் உறுதியாக மறுத்துவிட்டார். அப்படி சமரசம் செய்து தனக்கு ஒரு வெற்றி வேண்டாம் என்று கூறி இஸ்லாமியர்கள் பகுதியிலும் அவர் வாக்கு கேட்டார்” என்ற மகேந்திரன்,“ கட்சிகள் பொதுவாக நல்லவரா என்றுபார்த்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதில்லை. அவர் நிறைய பணம் செலவழிக்கக் கூடியவரா என்று பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு என்றால் விகிதாச்சார முறையில் தேர்தல் நடந்தால்தான் வர முடியும். கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் பிரதிநிதிகளை நியமித்துக் கொள்ளும்போது ஒழுங்கான நபர்களை நியமிக்க வாய்ப்பிருக்கிறது” என்று சொல்கிறார்.

எல்லா கட்சிகளுக்குள்ளும் கட்சியின் கொள்கைப்படி நடப்பவர்களுக்கும் கட்சிக்காக ஆரம்பத்திலிருந்து உழைத்தவர்களுக்கும் போட்டியிட வாய்ப்புத் தரப்படுவதில்லை என்ற புலம்பல் சத்தம் அதிகமாகவே கேட்கிறது. பணக்கார ஜால்ராக்கள்தான் தேர்தலில் நிற்க வைக்கப்படுகிறார்கள் என்கிற அவர்களின் குமுறல் தனிக்கட்டுரை எழுதத் தகுதியானது.

இனி வரும் தேர்தல்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்கிற பொத்தானை அழுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இது அரசியல் கட்சிகள் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்கள் ஓரளவுக்கு சரியானவர்களா என்று கவனத்தில் கொள்ள வைக்கும் என்று நம்பலாம். ஆனால் பொத்தானை அழுத்தும் வேகத்தை நல்லவேட்பாளரைத் தேர்வு செய்வதிலும் காண்பிக்க வேண்டும். அதுதான் தீர்வு. காமராஜர்களைத் தோற்கடித்துவிட வேண்டாம் வாக்காளர்களே!

நவம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com